Wednesday, November 20, 2024

தனிமையான ஒரு நாள்...!

காலையில் இருந்து 

தனிமையில் இருக்கி​றேன் 

பேஸ்புக் பார்த்தேன் 

சில காணொளிகள் 

கொஞ்சம் தொலைக்காட்சி 

கொஞ்சம் மடிக்கணினி 

நிறைய சிந்தனைகள் 

இப்படித்தான் 

இருக்கிறது எனது நாள் 


இசைப்புயலுக்கு விவாகரத்தாம் 

அன்பு 

கூடிவிட்டதா

அல்லது

நீர்த்துப் போய்விட்டதா?

என்னவாக இருக்கும்? 

விவகாரம் தனிப்பட்டது தான்

பிரிந்தது மனிதர்கள் தானே?

நா​ளை நாம் கவனமாக இருக்க

இன்று காரணம் 

அறிவது ​​தேவை அல்லவா?


என்னைப் போல 

மனைவியை திட்டியிருப்பாரா?

அன்புகாட்டநேரமில்லாமல் 

அலைந்திருப்பாரா?

என்னவாக இருக்கும்?


இருபத்து ஒன்பது வருடங்கள்

இணைந்த வாழ்க்கை 

​தொன்னூற்றொன்பதில் 

ஆட்டமிழந்த 

சச்சினைப் போல 

அவரைப் பார்க்கறேன் நான்

ஏன் ரஹ்மான்? 

சொல்ல மாட்டீர்களா? 


என்​னைப்போல 

​மனைவி​​​யை வேலைக்குப் 

போகச்​சொன்னீர்களா? 

சமையலுக்கு உதவி 

செய்யவில்லையா?

கெட்ட வார்த்தையில் திட்டினீர்களா?

சொல்ல மாட்டீர்களா ரஹ்மான்? 


சரி அதை விடுங்கள். 

இத்தனை ஆண்டுகளும் 

இனிமையாக வாழ்ந்தீர்கள் அல்லவா? 

அல்லது 

என்னைப் போல 

வாய் வார்த்தைக்காக 

வாழ்ந்தேன் என்று சொன்னீர்களா?

பட்டாடை உடுத்தினாலும் 

பம்பரமாய் சுற்றினாலும் 

நீங்களும் 

சராசரி மனிதர்தானா?

சொல்வீர்களா ரஹ்மான்? 


மன்னித்து விடுங்கள்! 

உங்களிடம் 

அடுக்கடுக்காக இத்தன கேள்விகள் கேட்டது 

அநாகரீகம் தான். 

அத்தனையும் உங்கள் 

அந்தரங்கம் தான். 

அதை நான் மதிக்கிறேன். 

ஆனால், 


சகித்துக் கொண்டு வாழும் 

சராசரி வாழ்க்கை 

சரிதானா 

என்று தெரிய வேண்டும் 

எனக்கு. 

என் தராசுக்கு 

எடைக்கல்லாகத் தான் 

எழுமாற்றாக வினாக்களை 

எழுப்பினேன். 

தவறுதான். 

மன்னித்துவிடுங்கள் 


Image Credit - Freepik website (www.freepik.com)



என் விடுமுறை நாளில் 

அவளுக்கு வேலை

நான் காலையில் இருந்து 

தனியாக நேரத்தைக் 

கடத்த வேண்டும் 

அவளது விடுமுறை நாளில் 

நான் வேலை 

பாதிநாளில் 

பணிக்குக் கிளம்ப வேண்டும் 


அவளை நான் 

கொஞ்சுவதில்லை

அவள் 

என்னைக் 

கெஞ்சுவதில்லை. 

எது அலுவலகம் 

எது வீடு 

என்று 

வித்தியாசம் தெரியாமல் 

ஏன் இரவு பகலாக 

உழைக்கிறோம் 

என்றே புரியாமல் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

இருவரும். 


என் வாழ்க்கை வேறு 

உங்கள் வாழ்க்கை வேறு 

இரண்டையும் ஒப்பிடுவது 

கடலையும்

குட்டையையும் 

ஒப்பிடுவதைப் போல

ஆனால் 

மனதைத் 

தேற்றிக் கொள்ளலாம் பாருங்கள்! 


நமக்கென்று 

பிரத்தியேகமான உறவுகள் 

எதுவும் 

இல்லாத தருணங்கள் 

கொடுமையானவை 

சண்டை போட்டாலும் 

தேடுவதற்கு ஒருவர் 

இருக்க வேண்டும் 

இதனால்தான் 

நாங்கள் 

சகித்துக் கொண்டு வாழ்கிறோம் 


காலையில் இருந்து 

நான் தனியாகத்தான் இருக்கிறேன்

அவள் வந்து 

சண்டை போடுவாளா 

அல்லது 

முத்தமிடுவாளா என்று 

தெரியாது

ஆனால் 

கூட இருப்பாள்

சகித்துக் கொண்டேனும். 


இணைவதை விட 

பிரிவது கடினம் 

அதற்குத் தான் 

அதிக மன வலிமை தேவை! 

எல்லாமுமாக இருந்து

யாரோவாக மாற 

எனக்கு தைரியமும் இல்லை

அதற்கு வலிமையும் கிடையாது

ஆனால் 

நானும் ஓர்நாள் பிரியலாம்

அது நிகழும்போது நிகழட்டும் 

அதுவரை 

சகித்திருப்பேன் 

சேர்ந்திருப்பேன் 

என்னவளோடு...! 


2024.11.20

03.00 PM 

No comments:

Post a Comment

தனிமையான ஒரு நாள்...!

காலையில் இருந்து  தனிமையில் இருக்கி​றேன்  பேஸ்புக் பார்த்தேன்  சில காணொளிகள்  கொஞ்சம் தொலைக்காட்சி  கொஞ்சம் மடிக்கணினி  நிறைய சிந்தனைகள்  இப...